பயிர் முதல் கால்நடை வரை, அனைத்தும் ஒன்றுக்கொன்று துணை! ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் நிலையான வருமானத்தை உருவாக்குங்கள்!!!

ஒருங்கிணைந்த விவசாய முறை (IFS) என்பது பயிர், கால்நடை, மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ஒருங்கிணைத்து, வளங்களை மறுசுழற்சி செய்து, செலவைக் குறைத்து, நிலையான வருமானத்தை உருவாக்கும் சிறந்த விவசாய முற

 · 4 min read

ஒருங்கிணைந்த விவசாய முறை (IFS): நிலையான விவசாயத்திற்கான நடைமுறை வழிகாட்டி

ஒரு பயிர் தோல்வியடைந்தாலும், உங்கள் பண்ணையின் வருமானம் முழுமையாக நின்றுவிடாமல் இருக்க முடியுமா? முடியும். அதற்கான சிறந்த அணுகுமுறைகளில் ஒன்றுதான் ஒருங்கிணைந்த விவசாய முறை (Integrated Farming System – IFS). ஒரே பயிரை மட்டும் நம்பியிருப்பதற்குப் பதிலாக, பயிர் சாகுபடி, கால்நடை, கோழி, மீன், காளான், தேனீ வளர்ப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளை ஒன்றோடொன்று இணைத்து செயல்படுத்துவதன் மூலம் விவசாயத்தை அதிக நிலையானதாகவும் லாபகரமானதாகவும் மாற்ற முடியும்.

ஒரே பயிரை மட்டும் நம்பியிருப்பது ஏன் ஆபத்து?

இன்றைய விவசாயத்தில் காலநிலை மாற்றம், மழை பற்றாக்குறை, நீர் தட்டுப்பாடு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மண் வளம் குறைதல், சந்தை விலை ஏற்ற இறக்கம் போன்ற பல சவால்கள் உள்ளன. குறிப்பாக சிறு மற்றும் குறைந்த நில விவசாயிகள் ஒரே பயிரை மட்டுமே சார்ந்திருந்தால், அந்தப் பயிரில் பாதிப்பு ஏற்பட்டவுடன் அவர்களின் முழு வருமானமும் பாதிக்கப்படலாம். இதற்கு மாற்றாக, ஒரே பண்ணையில் பல்வேறு வருமான வாய்ப்புகளை உருவாக்குவது விவசாயிகளுக்கு பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும்.

ஒருங்கிணைந்த விவசாய முறை (IFS) என்றால் என்ன?

ஒருங்கிணைந்த விவசாய முறை (IFS) என்பது பயிர் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை, மீன்வளம், வேளாண் காடு வளர்ப்பு (Agroforestry), மண்புழு உரம் (Vermicompost), காளான் மற்றும் தேனீ வளர்ப்பு போன்ற பல்வேறு விவசாயக் கூறுகளை ஒரே பண்ணை அமைப்பில் ஒன்றோடொன்று இணைத்து நிர்வகிக்கும் முறையாகும். இதில் முக்கியமான கருத்து “ஒரு கூறின் கழிவு, மற்றொரு கூறின் வளமாக மாற வேண்டும்” என்பதாகும்.

உதாரணமாக, வயலில் கிடைக்கும் நெல் வைக்கோலை கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கால்நடைகளிலிருந்து கிடைக்கும் சாணத்தை கம்போஸ்ட்(Compost) அல்லது உயிரி உரமாக மாற்றி மீண்டும் வயலுக்குப் பயன்படுத்தலாம். அதேபோல், சில அமைப்புகளில் கால்நடைக் கழிவுகளைப் பயன்படுத்தி உயிரி எரிவாயு (Biogas) தயாரிக்கவும் முடியும். இவ்வாறு பண்ணைக்குள் வளங்கள் தொடர்ந்து சுழற்சி செய்வதால் வெளியிலிருந்து வாங்க வேண்டிய உள்ளீடுகளின் தேவை மற்றும் செலவு குறைய வாய்ப்புள்ளது.

ஒருங்கிணைந்த விவசாய முறை (IFS) ஏன் முக்கியமானது?

IFS-ன் மிகப்பெரிய பலம் பல வருமான ஆதாரங்களை உருவாக்குவது. பயிர் அறுவடை ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே வருமானம் தரலாம். ஆனால் பால், முட்டை, காய்கறி, மீன் அல்லது பிற பண்ணைத் தொழில்கள் வெவ்வேறு காலங்களில் வருமானத்தை வழங்க முடியும். இதனால் ஒரு தொழிலில் எதிர்பாராத இழப்பு ஏற்பட்டாலும், மற்ற தொழில்கள் குடும்ப வருமானத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.

மேலும், பண்ணையில் உருவாகும் கழிவுகளை வீணாக்காமல் மீண்டும் பயன்படுத்துவதால் வளங்களின் பயன்பாடு மேம்படுகிறது. மண் வளத்தைப் பாதுகாப்பது, கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது, நீர் மற்றும் ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு நிலைத்தன்மை சார்ந்த நன்மைகளையும் IFS வழங்குகிறது.

ஒருங்கிணைந்த விவசாய முறை (IFS)ன் முக்கிய கூறுகள்

ஒரு IFS பண்ணையில் பல்வேறு கூறுகளை இணைக்கலாம். பயிர் உற்பத்தியில் நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயிரிடலாம். கால்நடை வளர்ப்பில் மாடு அல்லது எருமையை வளர்த்து பால் மற்றும் இயற்கை உரம் பெறலாம். கோழிப்பண்ணை மூலம் முட்டை மற்றும் இறைச்சி கிடைக்கலாம்.

நீர் வசதி உள்ள பகுதிகளில் மீன் வளர்ப்பை இணைக்கலாம். வேளாண் காடு வளர்ப்பு (Agroforestry) முறையில் வேம்பு, சுபாபுல் போன்ற மரங்களைப் பண்ணை அமைப்புடன் இணைக்கலாம். அதேபோல் மண்புழு உரம் (Vermicompost), காளான் வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களையும் நிலத்தின் அளவு மற்றும் வளங்களுக்கு ஏற்ப சேர்க்கலாம்.

இவற்றை தனித்தனி தொழில்களாக நடத்துவதைவிட, ஒன்றின் வளம் மற்றொன்றுக்குப் பயன்படும் வகையில் அமைப்பதே வெற்றிகரமான IFS-ன் அடிப்படையாகும்.

நிலத்தின் தன்மைக்கு ஏற்ற IFS மாதிரிகள்

ஈரநிலப் பகுதிகளுக்கான IFS

நீர் வசதி அதிகமாக உள்ள டெல்டா மற்றும் கால்வாய் பகுதிகளில் நெல் + மீன், நெல் + வாத்து, மீன் + வாத்து போன்ற ஒருங்கிணைந்த முறைகளைப் பயன்படுத்தலாம். நெல் வயலில் மீன் வளர்ப்பதன் மூலம் ஒரே நிலப்பரப்பில் இரண்டு வகையான உற்பத்தியைப் பெற முடியும். நெல் மற்றும் வாத்து இணைந்த முறையில் வாத்துகள் சில பூச்சிகள் மற்றும் களைகளை கட்டுப்படுத்துவதோடு அவற்றின் கழிவுகள் ஊட்டச்சத்து ஆதாரமாகவும் அமையலாம்.

மீன் மற்றும் வாத்து வளர்ப்பை இணைக்கும் முறையில் வாத்துக் கழிவுகள் நீரில் இயற்கையான உணவு வளம் உருவாக உதவக்கூடும். இதனால் நீர் வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி கூடுதல் வருமான வாய்ப்பை உருவாக்க முடியும்.

வறண்டநிலப் பகுதிகளுக்கான IFS

மழை குறைவாகவும் நீர் வளம் குறைவாகவும் உள்ள பகுதிகளில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், ஆடு அல்லது செம்மறியாடு வளர்ப்பு மற்றும் வறட்சியைத் தாங்கக்கூடிய மரங்கள் போன்றவற்றை இணைக்கலாம். வேம்பு, சுபாபுல் போன்ற மரங்களையும் பண்ணை அமைப்பில் சேர்க்கலாம்.

இத்தகைய பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, பண்ணைக் குளம், போன்ற நீர் பாதுகாப்பு முறைகள் முக்கியமானவை. இங்கு அதிகபட்ச உற்பத்தியை நோக்கமாகக் கொள்வதைவிட, குறைந்த வளங்களிலும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும் வகையில் பண்ணையை அமைப்பது முக்கியம்.

பாசன மற்றும் தோட்ட நிலங்களுக்கான IFS

ஆண்டு முழுவதும் பாசன வசதி உள்ள பகுதிகளில் காய்கறி சாகுபடி + கால்நடை + கோழி வளர்ப்பு போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். வாழை, தென்னை, மா போன்ற தோட்டக்கலைப் பயிர்களுடன்  மற்றும் காளான் வளர்ப்பையும் இணைக்க முடியும்.

துளி பாசனம் போன்ற நீர் சிக்கன முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நீரில் திறமையான உற்பத்தியை மேற்கொள்ள முடியும். நிலத்தின் தன்மை மற்றும் விவசாயி-யின் முதலீட்டு திறனைப் பொறுத்து இந்த மாதிரியை விரிவுபடுத்தலாம்.

IFS மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகள்

IFS-ல் ஒரே வருமானத்தை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய நிலை குறைகிறது. உதாரணமாக, பால் தினசரி வருமானத்தை வழங்கலாம்; முட்டை மற்றும் காய்கறிகள் தொடர்ந்து வருமானம் தரலாம்; பயிர்கள் அறுவடை நேரத்தில் அதிக வருமானத்தை வழங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் பணப்புழக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், பண்ணைக் கழிவுகளை உரம், கம்போஸ்ட் அல்லது பிற பயன்பாடுகளுக்கு மாற்றுவதால் வெளியில் இருந்து வாங்க வேண்டிய சில உள்ளீடுகளின் செலவை குறைக்க முடியும். ஒரே நிலப்பரப்பில் பல்வேறு செயல்பாடுகளை இணைப்பதன் மூலம் நிலம் மற்றும் வளங்களின் பயன்பாட்டுத் திறனையும் அதிகரிக்கலாம்.

சுற்றுச்சூழல் மற்றும் மண் வள நன்மைகள்

IFS என்பது வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறை மட்டுமல்ல; சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும். கால்நடை மற்றும் பயிர் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்வதன் மூலம் கழிவு மேலாண்மை மேம்படுகிறது. கம்போஸ்ட் மற்றும் உயிரி உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண் வளத்தைப் பராமரிக்க உதவலாம்.

குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கிடைக்கும் நன்மைகள்

ஒரே பண்ணையில் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், முட்டை மற்றும் பிற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதால் குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பு மேம்படலாம்.

வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகள் பண்ணையிலேயே உருவாகும்போது, வேலைக்காக நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய அவசியமும் குறையலாம். இதன் மூலம் விவசாயக் குடும்பங்களின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சுயநிறைவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் பண்ணையில் IFS-ஐ எவ்வாறு தொடங்கலாம்?

IFS-ஐ செயல்படுத்துவதற்கு பெரிய அளவில் ஒரே நேரத்தில் பல தொழில்களைத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. முதலில் உங்கள் நிலத்தின் அளவு, மண் தன்மை, நீர் வசதி, காலநிலை மற்றும் சந்தை வாய்ப்புகளை மதிப்பீடு செய்யுங்கள். அதன் அடிப்படையில் ஒன்றுக்கொன்று பயனளிக்கும் தொழில்களைத் தேர்வு செய்யுங்கள்.

உதாரணமாக, ஒரு ஏக்கர் பண்ணையில் பயிர் சாகுபடியுடன் சிறிய கால்நடைத் தொழுவம், கோழி வளர்ப்பு, சிறிய மீன் குளம் மற்றும் வெர்மிகம்போஸ்ட் அலகு (Vermicompost Unit )  போன்றவற்றை நிலத்தின் வசதிக்கு ஏற்ப திட்டமிடலாம். கால்நடைத் தொழுவத்தை உரம்(Compost unit ) அல்லது உயிரி எரிவாயு அலகுக்கு( Biogas Unit )  அருகில் அமைப்பது வளங்களை எளிதாக மறுசுழற்சி செய்ய உதவும். நீர் ஓட்டத்தை கருத்தில் கொண்டு மீன் குளத்தை நிலத்தின் கீழ்ப்பகுதியில் அமைக்கலாம்.

மேலும், அனைத்து தொழில்களும் ஒரே நேரத்தில் வருமானம் தரும் என்று எதிர்பார்ப்பதைவிட, வெவ்வேறு காலங்களில் வருமானம் கிடைக்கும் வகையில் அவற்றைத் திட்டமிடுவது சிறந்தது. பால் தினசரி, முட்டை மற்றும் காய்கறிகள் தொடர்ச்சியாக, பயிர்கள் குறிப்பிட்ட அறுவடை காலங்களில் என வருமானத்தைப் பிரித்து அமைத்துக்கொள்ளலாம்.

IFS – நிலையான விவசாயத்திற்கான ஒரு சிறந்த அணுகுமுறை

ஒருங்கிணைந்த விவசாய முறை என்பது பல விவசாயத் தொழில்களை ஒரே இடத்தில் செய்வது மட்டுமல்ல. பயிர், கால்நடை, நீர், மண், கழிவு மற்றும் மனித உழைப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றோடொன்று இணைத்து, கிடைக்கும் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தும் ஒரு முழுமையான பண்ணை மேலாண்மை அணுகுமுறையாகும்.

ஒரு பயிரை மட்டும் நம்பியிருப்பதால் ஏற்படும் ஆபத்தை குறைத்து, பல்வேறு வருமான வாய்ப்புகளை உருவாக்கவும், பண்ணைக் கழிவுகளை வளமாக மாற்றவும், மண் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் IFS உதவுகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறைந்த நில விவசாயிகள் தங்களிடம் உள்ள வளங்களுக்கு ஏற்றவாறு சிறிய அளவில் தொடங்கி, அனுபவத்திற்கேற்ப படிப்படியாக விரிவுபடுத்தலாம்.

உங்கள் பண்ணையில் ஏற்கனவே எந்தெந்த IFS கூறுகளைப் பயன்படுத்துகிறீர்கள்? உங்கள் அனுபவத்தை கருத்துகளில் பகிருங்கள்!!!




Swathi Malairaj

Swathi M Trainee – Content Creator, Waytoogreen Pvt. Ltd. B.Sc. (Hons) Agriculture graduate with a focus on landscaping and hydroponics. 1 week trained at Prajaa Juice Industry, Theni, gaining hands-on exposure to Agri-processing. Now creates engaging, research-backed content on agriculture at Waytoogreen.

No comments yet.

Add a comment
Ctrl+Enter to add comment